அக்குப்பங்சர்

அக்குப்பங்சர் சிகிச்சை முறை' என்பது என்ன?

அக்குப்பங்சர் என்பதை 'சிற்றூசி மருத்துவம்' அல்லது 'குத்தூசி மருத்துவம்' எனலாம். உலகின் மிகத்தொன்மையான மருத்துவக் கலைகளில் ஒன்று. சீனப்பாரம்பரிய மருத்துவமுறைகளில் சிறந்த ஒரு பகுதியாக பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வளர்ந்துள்ள ஆற்றல்மிகு சிகிச்சை முறை.

மருந்தளித்துக் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த உன்னத முறையாக (Supreme system)ஹோமியோபதியும், மருந்தில்லாமல் குணப்படுத்தும் முறைகளில் தலைசிறந்த முதன்மைத் தகுதி வாய்ந்த முறையாக அக்குப்பங்சரும் திகழ்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக உலக மக்களிடம் மிகவும் பிரபலமடைந்து வரும் மருத்துவமுறை இது.

பட்டினியும் நோய்களும் மலிந்த சீன தேசத்தை இன்று சுகாதாரத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியதில் அக்குப்பங்சரின் பங்களிப்பும் மகத்தானது. இந்தியா போன்ற நாடுகள் சீன வெற்றிப் பயணத்தின் பின்னணியைப் புரிந்து பின்பற்ற வேண்டும்.

அக்குப்பங்சரின் அடிப்படை பார்வை என்ன?

'கீ' (Qi) எனப்படும் ஆற்றலின் (Bodys Energy) சீரான இயக்கத்தை சார்ந்ததே ஆரோக்கியம் என்ற தத்துவ அடிப்படையில் அமைந்தது சீன அக்குப்பங்சர். ஒரு மனிதன் முழு நலத்தோடு இருக்கிறான் என்றால் அவனது உடல் முழுவதும் சக்தியோட்டம் சீராகப் பாய்கிறது என்று பொருள். நோய் ஏற்பட்டுள்ளது என்றால் சக்தி ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதன் வெளிப்பாடாக வெவ்வேறு நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும். மிக மெல்லிய ஊசிகள் மூலம் சிகிச்சை அளித்து சக்தி ஓட்டத்தைச் சீர்படுத்தி, நோய்களிலிருந்து விடுதலை பெறுதலே அக்குப்பங்சரின் குறிக்கோள் ஆகும்.

அக்குப்பங்சர் சிகிச்சையில் காயம், வலி, ரத்தக்கசிவு எதுவும் ஏற்படுமா?

ஊசி என்றதும் ஆங்கில மருத்துவமுறையில் பயன்படும் சிரஞ்சுடன் கூடிய ஊசிதான் எல்லோரின் நினைவுக்கும் முதலில் வரும் அல்லது மருத்துவமனைகளில் சிறு வயது முதல் ஊசி குத்தலால் பட்ட வலிகள் வரும். அதனால் பெரும்பாலோர் ஊசியை விரும்புவதில்லை. நமது சமூகத்தில் Needle Phobia  எனப்படும் ஊசி மீதான பயம் பலருக்கும் உள்ளது.

அக்குப்பங்சர் ஊசி இத்தகைய வலியை ஏற்படுத்தாது. மயிரிழை போன்ற மெல்லிய ஊசிகள் உடலில் செருகப்படும் போது ஒருவித உணர்வு மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதனால் காயமோ, ரத்தக் கசிவுகளோ பொதுவில் ஏற்படுவதில்லை. சிலருக்கு மெல்லியதொரு வலியுணர்வு, சிலருக்கு மெல்லிய அதிர்வு உணர்வு, சிலருக்கு குறுகுறு உணர்வு, சிலருக்கு லேசான வலி, சிலருக்கு லேசான மதமதப்பு இருக்கக்கூடும். ஆனால் இந்த உணர்வுகளால் தொடர் பாதிப்புகள் நேராது. மேலும் இவை நீடிக்கும் காலஅளவு மிகக் குறைவு. மேற்குறிப்பிட்ட உணர்வுகள் எல்லாமே அக்குப்பங்சர் சிகிச்சையின் ஆற்றல் வெளிப்படுவதன் அறிகுறிகளே.

மருந்து, மாத்திரைகள் உண்பது போல அக்குப்பங்சர் சிகிச்சை தினமும் செய்ய வேண்டுமா?

சில நோயாளிகளுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை துவக்கத்தில் சில நாட்கள் தினசரி தேவைப்படலாம். மற்ற பெரும்பாலோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் (3 நாள், 5 நாள், 1 வாரம், 2 வாரம் என்று) சிகிச்சை பெற்றாலே போதும்.

சிகிச்சையளிக்கும் போது ஆழ்நிலைக் காரணங்களின் தன்மைக்கேற்ப பிரதிவினைகள் ஏற்படும். சில நோய்கள் வெகு ஆழமானவை  (Deep seated) . பலமுறை சிகிச்சைக்குப் பின்னரே மெதுமெதுவாகக் குணமளிப்பு நிகழும். மற்ற பல நோய் நிலைகளில் ஒருசில சிகிச்சைகளிலேயே துரிதமான நல்விளைவுகள் ஏற்படும்.

அக்குப்பங்சர் சிகிச்சைக்கு முன் பின் சாப்பிடலாமா? உடற்பயிற்சி செய்யலாமா?

சாப்பிடாமல் வெறும் வயிற்றிலிருக்கும்போது சிலரது ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். அப்போது அக்குப்பங்சர் சிகிச்சை அளித்தால் மயக்கம் ஏற்பட்டு விடும். எனவே சிகிச்சைக்கு சிறிது முன்பாக சிறிதளவேனும் சாப்பிட்டிருப்பது நல்லது. வயிறு புடைக்க உண்ணக்கூடாது.

அக்குப்பங்சர் சிகிச்சைக்குப் பின் சில மணி நேரம் கழித்து உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் சிகிச்சைக்கு சற்று முன்னர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. அது சிகிச்சைக்கு இடையூறாக அமையும்.

எப்போதெல்லாம் அக்குப்பங்சர் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்?

அதிக பலவீனமாயுள்ளபோது, பசி நேரம், மிகு உணர்ச்சியுள்ள நிலையில், உடலுறவு முடிந்த சிறிது நேரத்தில் அக்குப்பங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.